Tuesday, December 4, 2012

1. சொல்லின் செல்வன்

இலங்கை சென்று சீதையைக் கண்டு பேசி விட்டு அனுமன் இராமன் இருக்குமிடத்துக்குத் திரும்புகிறான். இராமபிரான் மிகவும் ஆவலுடன் எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லும் ஆர்வத்தில் மிக விரைந்து வருகிறான். அனுமன் பறந்து வரும் வேகத்துக்கு இணையாக எதைச் சொல்வது?

காலம் காலமாக வேகத்தைக் குறிப்பிடக் கவிஞர்களும், காவியம் இயற்றியவர்களும் பலவிதமான உதாரணங்களைக் குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். மனோவேகம், வாயுவேகம் போன்ற வர்ணனைகளும், வேறு பல உதாரணங்களும் பொதுவாகப் புலவர்களால் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் கம்பன் எதையுமே தனிச் சிறப்புடன் வர்ணிக்கும் இயல்புடையவன். உதாரணமாகப் பெண்களைப் புலவர்கள் பலவிதமாக வர்ணித்துள்ளனர். ஆனால் சீதையை வர்ணிக்கக் கம்பன் பயன்படுத்திய சொற்றொடர் தனித்தன்மை வாய்ந்தது. சீதையை 'செஞ்சொற்கவி இன்பம்' என்று வர்ணிக்கிறான் கம்பன். என்ன ஒரு அற்புதமான, வித்தியாசமான, ஆழமான பொருள் கொண்ட வர்ணனை பாருங்கள்! கம்பனின் இந்தத் தனிச்சிறப்பு அனுமனின் வேகம் பற்றிய அவனது விளக்கத்திலும் வெளிப்படுகிறது.

வானரர்கள் அனைவரும் அனுமன் வருவானா என்று தென்திசை வானத்தைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்களுக்கு அனுமன் தென்படுகிறான்.

இப்போது ஒரு தற்கால நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நாம் வெட்டவெளியிலொ, மொட்டை மாடியிலோ நிற்கும்போது வானில் ஒரு விமானத்தைக் கண்ணுறுவதாக வைத்துக் கொள்வோம். முதலில் தொலை தூரத்தில் ஒரு புள்ளியாகத் தென்படும் விமானம் அருகில் வர வரப் பெரிதாகி நமது தலைக்கு மேல் வந்து சேர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடிக்கும்.

இப்போது இந்தத் தற்கால விமானத்தின் வேகத்துடன் அனுமனின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வானரர்களில் ஒருவர் தொலைவில் ஒரு புள்ளி போல் அனுமனைக் கண்ணுறுகிறார். (அந்தக் காலத்தில் விமானங்கள் இல்லை - இராவணனிடம் இருந்த புஷ்பக விமானத்தைத் தவிர. வானில் பறப்பது என்பது அனுமனைப் போன்ற ஒரு சிலருக்கே இயலக்கூடிய விஷயம் என்பதால், வானத்தில் தென்பட்ட உருவம் அனுமனாகத்தான் இருக்க  வேண்டும் என்று அந்த வானரர் சுலபமாக ஊகித்து விட்டதாக வைத்துக் கொள்வோம்.) உடனே தான் கண்டதை மற்றவர்களிடம் சொல்ல விழைந்து, 'அனுமன் அதோ வந்து விட்டான்' என்று சொல்ல நினைக்கிறார்

அவ்வளவு நீளமாகக் கூட இல்லை. 'அனுமன் வானத்தில் தோன்றினான்' என்பதைச் சுருக்கமாக , 'தோன்றினன்' என்று சொல்ல நினைக்கிறார். 'தோன்றினான்' என்று நெடிலில் சொன்னால் இன்னும் சற்று நேரமாகும் என்பதால் 'தோன்றினன்' என்று குறிலில் சொல்ல நினைக்கிறார்! ஆனால் அப்படி அவர் சொல்ல நினைத்து, அதைச் சொல்வதற்குள் அனுமன்  அவர்களுக்கு அருகில் வந்து தரை இறங்கி விட்டானாம்!

ஒரு சொல் நம்மிடமிருந்து வெளிப்படும் முன்பு, அதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழுந்து, அந்த எண்ணம் சொல்லாக வெளிப்படுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை நம்மால் சுலபமாக உணர்ந்து கொள்ள முடியும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எண்ணத்துக்கும் சொல்லுக்கும் இடைப்பட்ட நேரம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக் குறுகியது. இந்க் குறுகிய காலத்துக்குள், தொலைவில் புள்ளியாகத் தெரிந்த அனுமன் அருகில் வந்து தரையிறங்கி விட்டான் என்றால் அவனது வேகம் எத்தகையது என்பதை எண்ணி வியக்கலாம். முன்பு குறிப்பிட்ட விமான உதாரணத்துடன் ஒப்பிடும்போது அனுமனின் வேகம் எவ்வளவு அதிகம் என்பதை உணரலாம்.

'தோன்றினன் என்பதோர் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி'

என்ற எளிமையான சொற்றொடரில் ஆழமான அரிய பொருளை விளக்கி விட்டான் கம்பன்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பன்மொழி அறிஞருமான வ.வே.சு.ஐயர் கம்பனின் பெருமையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: "வால்மீகி, ஹோமர், காளிதாசன், ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்ற உலக மகா கவிகள் வீற்றிருக்கும் அவையில் கம்பன் நுழைந்தால், இந்த மகா கவிகள் அனைவரும் எழுந்து நின்று கம்பனுக்கு மரியாதை செலுத்துவர்."

சத்தியக் கவிஞன் பாரதியோ,
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உணமையிது வெறும் புகழ்ச்சியில்லை."

என்று கம்பனை முதன்மைக் கவியாக்கி மகிழ்கிறான்.

கம்பன் அனுமனை 'சொல்லின் செல்வன்' என்று விளிக்கிறான்.

கம்பனின் சொல்லாட்சியின் சிறப்பை நோக்கும்போது, 'சொல்லின் செல்வன்' என்று கம்பன் அனுமனுக்குச் சூட்டிய புகழாரத்தைக் கம்பனுக்கே சூட்டி மகிழ்வது பொருத்தமாகப் படுகிறது.

2 comments: