Monday, January 12, 2026

4. புலவர் கூறிய யோசனை

ஒரு தமிழ்ப் புலவரும் அவருடைய நண்பரும் செருப்பு அணியாமல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நண்பர் தவறுதலாக சாலை ஓரத்தில் படிந்திருந்த சேற்றை மிதித்து விட்டார். அவர் தன் காலைக் கழுவிக் கொள்ள அருகில் தண்ணீர்க் குழாய் ஏதும் இருக்குமா என்று தேடினார். எதுவும் இல்லை.

அப்போது தமிழ்ப் புலவர், அவரிடம்,

“பத்துரதனின் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்

மனையாளின் காலை நீக்கித் தேய்'

என்றார்.

புலவர் சொன்னதன் பொருள் நண்பருக்குப் புரியவில்லை.

“இப்படி ஒரு திருக்குறள் இருக்கிறதா என்ன? நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றார் நண்பர்.

‘இது திருக்குறள் இல்லையடா, அறிவிலி!. உன் காலைச் சுத்தம் செய்து கொள்ள பா வடிவில் நான் சொல்லும் யோசனை!” என்றார் புலவர்.

“உன் பா எனக்குப் புரியவில்லையேடா பாவி! இந்தப் பாமரனுக்குப் புரியும்படி விளக்கிச் சொல்!” என்றார் நண்பர்.

புலவர் தான் கூறிய ‘பா’வின் பொருளை விளக்கினார்.

“பத்து ரதன் – தசரதன்

அவன் புத்திரன் – இராமன்

அவன் மித்திரன் – சுக்ரீவன்

அவன் சத்துரு – வாலி

அவன் மனையாள் தாரை

தாரையின் முதலெழுத்தான ‘தா’ வின் காலை நீக்கினால், அது தரை என்றாகும்.

உன் காலைத் தரையில் தேய்த்துச் சுத்தம் செய்து கொள் என்றுதான் கூறினேன்” என்று விளக்கினார் புலவர்.